தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மீதான மானிய கோரிக்கைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது:
1876ம் ஆண்டு உருவாக்கப்பட்டு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழல் ஏரியை மேம்படுத்தும் பணி திட்டமிட்டு முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. மேலும் 12 ஏரிகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அம்பத்தூர் பேருந்து நிலையம் 57 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.15 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.
அதேபோல் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சென்னை மாநகரின் முதல் பேருந்து நிலையமான தண்டையார்பேட்டை பேருந்து முனையமும் ரூ.15 கோடியில் அனைத்து வசதிகளுடன் தற்போது நவீனப்படுத்தபட்டு வருகிறது. சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக குத்தம்பாக்கத்தில் ரூ.414 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இம்முனையத்தை வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். செங்கல்பட்டில் ரூ.97 கோடியில், மாமல்லபுரத்தில் ரூ.90 கோடியில், முடிச்சூரில் ரூ.48 கோடியில் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில், 9 மாநகர பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காலநிலைப் பூங்கா, ஈரநிலப்பசுமை பூங்கா, நீரூற்றுப் பூங்கா என புதுப்புது பூங்காக்கள் உருவாக்கும் பணிகள் தொடரும். சென்னை நகரம் முழுவதும் பசுமைப் புரட்சி படரும். சென்னைப் பெருநகர பகுதிகளில் பழமையான மற்றும் புதிய 19 விளையாட்டு மைதானங்கள் தற்போது நவீன அம்சங்கள் கொண்ட உபகரணங்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ஆண்டுகால பழமை வாய்ந்த புளியந்தோப்பு கன்னிகாபுரத்திலுள்ள விளையாட்டு மைதானமும் உள்ளது. இந்த மைதானங்கள் ரூ.20 கோடி செலவில் புனரமைக்கப்படுகிறது.
2023-24ம் ஆண்டு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ரூ.1,000 கோடியில் தொடங்கிய இத்திட்டம் இன்றைக்கு பல துறைகளின் பங்களிப்புடன் ரூ.6,848 கோடி மதிப்பீட்டில் 252 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வளர்ந்து வரும் நவீன யுகத்தில், உலக அறிவு பெறுவதற்கு உண்டான அனைத்து வசதிகளுடன் கூடிய, மாநிலத்தின் முதல் படைப்பகத்தை கொளத்தூரில் கடந்தாண்டு முதல்வர் திறந்து வைத்தார். இதுவரையில் சுமார் 30,000திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கும், பணி செய்வதற்கும் மற்றும் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக குறிப்பாக வடசென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் படைத்திட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
தீவுத்திடலில் கடந்த 43 ஆண்டுகளாக வர்த்தக பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் பொருள் ஈட்டும் இடமாகவும், மக்கள் பொழுதுபோக்கும் இடமாகவும் தீவுத்திடல் திகழ்கிறது. தற்காலிக அரங்கங்களில் பொருட்காட்சிகள் நடைபெற்று வரும், இந்த பகுதிக்கு அருகில் ரூ.103 கோடியில் 1,60,000 சதுர அடியில் 20 அரங்கங்களை கொண்ட நிரந்தர பொருட்காட்சி அரங்கம், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அமைய இருக்கின்றது. இந்த அரங்கை இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
வண்ணமீன் வர்த்தகத்தை பாதுகாக்க மீன்வளத்துறையுடன் இணைந்து 3.94 ஏக்கர் நிலத்தில், 1,25,000 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கூடிய 188 கடைகள் கொண்ட கொளத்தூர், வண்ணமீன் சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தீவுத்திடல் நிரந்தர பொருட்காட்சி அரங்கம், வண்ணமீன் வர்த்தகத்தை இந்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 2022ம் ஆண்டு மே மாதம் திட்ட அனுமதிக்கான விண்ணப்ப செயல் முறையை, இணைய வழிச் செயல்முறையாக அறிமுகப் படுத்தினோம்.
விண்ணப்பித்தல் தொடங்கி திட்ட அனுமதி பெறும்வரை அனைத்துச் செயல்பாடுகளும் இணைய வழியில் நடைபெறுவதால் பயனாளிகளுக்கு நேர விரயம் ஏற்படாமல் வெளிப்படைத் தன்மையான நடைமுறைக்கும் வழிவகுக்கிறது. இந்த திட்டம் மூலம், திட்டமிடல் அனுமதிக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உதாரணமாக 2020 ஆம் ஆண்டில் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 826 ஆக இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் 1,331 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவே இந்தத் திட்டம் சிறப்பான திட்டம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அவர் பேசினார்.
The post தீவுத்திடலில் 1.60 லட்சம் சதுரஅடியில் ரூ.103 கோடியில் நிரந்தர பொருட்காட்சி அரங்கம்: பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.