புதுடெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய மிக கொடூர தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதன் முடிவில், அட்டாரி – வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு படை ஆலோசனை அதிகாரிகள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து தேசிய பாதுகாப்பு குறித்த அனைத்து கட்சிகளின் கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
The post தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.