ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த அரசு ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பிர்தவுஸ் அகமது பட் என்பவர், கடந்த 2005ம் ஆண்டு சிறப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் 2011ம் ஆண்டு காவலராக பதவி உயர்வு பெற்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் மின்னணு கண்காணிப்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்ததால் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் வசித்த முகமது அஷரப் பட், கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரெஹ்பார்-இ-தலீம் என்ற புதுமையான கல்வி திட்டத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். முகமது அஷரப் பட்டுக்கு, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது கடந்த 2022ல் வௌிச்சத்துக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டு ரியாசி சிறையில் அடைக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் வனத்துறையில் கடந்த 1996ம் ஆண்டு உதவியாளராக சேர்ந்த நிசார் அகமது கான், பின்னர் அனந்த்நாக் வனச்சரக அலுவலகத்தில் ஆர்டர்லியாக பணியாற்றி வந்தார்.
இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு அனந்த்நாக்கில் கண்ணிவெடி தாக்குதலில் அப்போதைய மின்துறை அமைச்சர் குலாம் ஹசன் பட் மற்றும் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது நிசார் அகமது கானின் தீவிரவாத செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட் டார். இந்நிலையில் பிர்தவுஸ் அகமது பட், முகமது அஷரப் பட் மற்றும் நிசார் அகமது கான் ஆகியோரை பணி நீக்கம் செய்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
The post தீவிரவாதிகளுடன் தொடர்பு ஜம்மு காஷ்மீரில் 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்: துணைநிலை ஆளுநர் உத்தரவு appeared first on Dinakaran.