மதுரை: அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை முடியும் வரை, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் திருச்சியில் கடந்த 4ம் தேதி மாநில அளவிலான கூட்டம் நடந்தது. இதில், அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் இன்று (பிப். 25) ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஐகோர்ட் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்று தடை செய்துள்ளது. இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் சட்ட விரோதம் ஆகும்.இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அவர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்னை. சாலை மறியல் நடைபெற்றால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், மருத்துவ தேவைகளுக்காக செல்பவர்கள், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமின்றி, வேலைநிறுத்தத்தில் பங்கு பெறாத அரசு ஊழியர்களும் பாதிப்பு அடைவர். சாலை மறியலில் ஈடுபடுவோரை போலீசார், திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகள் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ-ஜியோ நடத்த உள்ள வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதில் ஈடுபடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது குற்றவியல் சட்டப்படி வழக்கு பதிவு செய்யவும், அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், உரிய விசாரணை நடத்தி நிரந்தர பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், ‘‘ஒரு நாள் அடையாள போராட்டம்தானே. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சம்பந்தப்பட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன’’ என கேள்வி எழுப்பினர். பிறகு இந்த மனுவிற்கு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், ‘‘அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது. அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.