சென்னை: தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், கைதானவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரச்சாரம் செய்ததாகவும், தீவிரவாத இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களை மூளைச் சலவை செய்ததாகவும், இந்திய அரசுக்கு எதிராக சதி செயலில் ஈடுபட ரகசிய கூட்டம் நடத்தியதாகவும் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் உள்பட 6 பேர் கடந்த ஜூன் மாதம் சென்னை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டு, இரு தினங்களுக்கு முன்னர் சென்னை தரமணியைச் சேர்ந்த ஃபைசல் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே வேளையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 6 பேரையும் என்ஐஏ, கடந்த 7ம் தேதி முதல் 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.