சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, சமீபத்தில் பசு பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, சந்நியாசி ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர காய்ச்சல் பாதிப்பு பற்றி பேசினார். இதன் தொடர்ச்சியாக, பசுவின் கோமியம் குடித்ததும் அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் பாதிப்பு சரியானது என்றும் அதில் இருந்து விடுபட்டார் என்றும் சந்நியாசிக்கு நேர்ந்த விசயங்களை எடுத்து கூறினார்.
அவர் தொடர்ந்து, கோமியத்தின் பாக்டீரிய எதிர்ப்பு பண்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்பு மற்றும் செரிக்கும் பண்புகள் ஆகியவற்றை பற்றி புகழ்ந்து பேசினார். வயிறு தொடர்பான பாதிப்புகளுக்கு, வயிற்றெரிச்சலுக்கு தீர்வு காணவும், இது பயன்படும் என கூறிய அவர், அதன் மருத்துவ மதிப்புகளை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதுபற்றிய அவருடைய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அவருடைய இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. எனினும், காமகோடி அவருடைய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார் என சென்னை ஐ.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்ததுடன், இயற்கை சார்ந்த விவசாயியான அவர், பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார் என்றும், அவர் அப்படி பேசுவதற்கான பெரிய சூழல் அப்போது அமைந்திருந்தது என்றும் தெரிவிக்கின்றன.