தீர்வு எப்போது?

2 months ago 9

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல், அட்டூழியங்களால் தமிழக மீனவர்கள் படும் துயரங்கள் முடிவின்றி தொடர்கதையாகத் தொடர்கின்றன. கடந்த 10 ஆண்டுகள் வரை எல்லை தாண்டி மீன்பிடித்தால் மீனவர்கள், அவர்களது படகுகளை சிறைபிடிக்கும் சம்பவங்கள் மட்டுமே நடந்தன. பின்னர் விசாரணை நடத்தப்பட்டு, விடுதலை செய்வது என இருந்தது. பாஜ ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து நிலைமை தலைகீழாக மாறியது. தமிழக மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகளை அரசுடமை ஆக்கியது இலங்கை அரசு. கைது செய்யப்படும் மீனவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனையும், லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கும் புதிய நடைமுறையை இலங்கை கொண்டு வந்தது.

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை நமது மீனவர்களை விரட்டியடிப்பது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, மீன்களை அள்ளிச்செல்வது, கைது செய்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வது என தொடர்ந்து அண்டை நாடான இலங்கை அட்டூழியம் செய்து வருகிறது. ஒப்பீட்டளவில், கடந்த காலங்களை விடவும், மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்றப் பிறகே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், சிறைபிடிப்புகளும் அதிகரித்திருக்கிறது.

இலங்கை அரசு கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அப்போது, ரூ.32 ஆயிரம் கோடி நிதியை இலங்கைக்கு வாரி வழங்கியது ஒன்றிய அரசு. தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் அடிப்படை, அத்தியாவசியப் பணிகளுக்கே போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில், இலங்கைக்கு இவ்வளவு நிதி தேவை தானா என விமர்சனங்கள் எழுந்தன. நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்தப் பிறகாவது, நன்றியுணர்வுடன் நமது மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதா… என்றால், இல்லை. அது எப்போதும் போல தொடர்கிறது. இதையெல்லாம், கண்டிக்காமல் ஒன்றிய அரசு நீலிக்கண்ணீர் வடிப்பதாகவே மீனவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

‘நாங்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை கைவைக்காது…’ என பத்தாண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியினர் வழங்கிய வாக்குறுதிகள்… காற்றோடு போய்விட்டது. இலங்கை கடற்படையின் தாக்குதல்களையும், சிறைபிடிப்புகளையும் ஒன்றிய அரசு மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் 9ம் தேதி கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதற்கும் சரி, இதற்கு முன்பு நமது மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதும் சரி… ஒன்றிய அரசின் எதிர்வினைகள், நடவடிக்கைகள் கடும் அதிருப்தியளிப்பதாகவே இருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் படி பிரதமர் மோடி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனாலும், ஒன்றிய அரசிடம் கனத்த மவுனமே தொடர்கிறது. 2019ல் நீலப்புரட்சி என்ற பெயரில் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை அறிவித்து மீனவர்களை நஷ்டத்தில் ஆழ்த்தியது. முடிவின்றித் தொடரும் தமிழக மீனவர்களின் கடல் துயரங்களுக்கு ஆளும் ஒன்றிய அரசு எப்போது தீர்வு காணப்போகிறது… என்ற கேள்வி, கடலோரங்களில் வசிக்கும் அப்பாவி மீனவக் குடும்பங்களில் அலை போல அன்றாடம் எதிரொலிக்கிறது.

The post தீர்வு எப்போது? appeared first on Dinakaran.

Read Entire Article