திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி, கவுன்சிலர் ஒருவரிடம் கார் ஓட்டுனராக வேலைப்பார்த்தவர் தற்போது பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா, காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 30 ந்தேதி சரண்யாவின் செல்போனுக்கு அவரது தாயார் காவேரி தொடர்புகொண்டுள்ளார். அவரது செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்ததால், மருமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். உங்கள் மகள் சரண்யா இரு தினங்களுக்கு முன்பே சண்டை போட்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கோபி கூறி இருக்கிறார்.
இதையடுத்து தனது மகள் மாயமானதாக கூறப்படும் சம்பவத்தில் மருமகன் கோபி மீது சந்தேகம் உள்ளதாக காவேரி போலீசில் புகார் அளித்தார். சரண்யாவின் செல்போன் கடைசியாக கோபியின் வீட்டில் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்ததால் போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது சரண்யா மாயமான வழக்கின் மர்மம் விலகியது.
சரண்யா கடந்த சில மாதங்களாக பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்து வந்ததாக கூறப்படுகின்றது. தானே ஒரு பைனான்ஸியர் என்ற நிலையில் பிறரிடம் கடனுக்கு பணம் வாங்குவது ஏன் ? என்று கோபி கேட்ட போது மனைவியிடம் இருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகின்றது. கடன் பிரச்சனையால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவதும் சரண்யா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று வருவதும் வாடிக்கையாகி உள்ளது.
சம்பவத்தன்று சரண்யாவின் கடன் விவகாரம் குறித்து விசாரித்த போது 5 க்கும் மேற்பட்டோரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்தது தெரியவந்தது. தனது மனைவி வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும், அந்த நபருக்காக கடன் வாங்கி செலவு செய்வதாகவும் கோபி சந்தேகப்பட்டு அடித்து உதைத்துள்ளார். அவர் தன்னுடைய சுய செலவுக்காகவே பணம் வாங்கியதாக தெரிவித்த நிலையில் அதனை கேட்க மறுத்த கோபி ஆத்திரத்தில் அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்ததாகவும், பின்னர் கொலையை மறைக்க மனைவியின் உடலை 6 துண்டு களாக வெட்டி டிராலி சூட்கேஸில் அடைத்து காரில் எடுத்துச்சென்று கிருஷ்ணகிரி மாவட்ட காட்டுப்பகுதியில் வீசிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையை மறைக்க சரண்யாவின் மாமியார் சிவகாமியும், கோபின் நண்பர் விஜயராகவனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகின்றது.
டிராலி சூட்கேசுடன் கைப்பற்றப்பட்ட சரண்யாவின் உடல் பாகங்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார். இந்த கொலை தொடர்பாக கணவர் கோபி, மாமியார் சிவகாமி, விஜயராகவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.