சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கோஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை விற்பனையகத்தில் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். சிறப்புரிமை அட்டையையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி அளித்த பேட்டி:
தீபாவளி விற்பனைக்காக, தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களில் பயின்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான குர்த்தீஸ், கிராப் டாப், ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஸ்கர்ட்ஸ் உள்ளிட்ட ரகங்கள் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை விற்பனையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.76.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
The post தீபாவளியையொட்டி கைத்தறி துணிகளை ரூ.100 கோடிக்கு விற்க கோ-ஆப்டெக்ஸ் இலக்கு: அமைச்சர் ஆர்.காந்தி தகவல் appeared first on Dinakaran.