சென்னை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திருநாள் வரும் 31ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தீபாவளியை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக புறப்பட்டு வருகின்றனர். அதிகப்படியான மக்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் (புதன் கிழமை) விடுமுறை எடுத்துக்கொண்டு இன்றில் இருந்தே சொந்த ஊர் புறப்பட தயாராகிவிட்டனர்.
நாளை இதை விட இன்னும் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், மக்கள் இன்று மாலையில் இருந்தே சொந்த ஊர் புறப்பட்டு வருவதால், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தி வரிசையில் நின்றவாறு ரெயில்களுக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். பஸ், ரெயில் நிலையங்களில் இன்றே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், நாளை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.