சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தாண்டும் முன்னெச்சரிக்கையாக தீபாவளி தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 25 படுக்கை வசதிகள் உள்ளன. தீபாவளி அன்று குழந்தைகள், நோயாளிகள், வயதான முதியவர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்தக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பிரித்துப் பார்க்கக் கூடாது. கால் சட்டை பையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு மற்றொரு பட்டாசுகளை வெடிக்க கூடாது. சாதாரண குப்பைகளில் பட்டாசுகளை வெடித்து போடக்கூடாது.
பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்த வேண்டும். வாலியில் தண்ணீரை வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும்போது செல்பி எடுக்க கூடாது என அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, அதேபோல் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் சார்பில் தீபாவளி விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.
The post தீபாவளியை ஒட்டி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தீக்காய சிறப்பு பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கினார் appeared first on Dinakaran.