தீபாவளிக்கு ராமர் கோவிலை சீன பொருட்களை கொண்டு அலங்கரிக்க முடிவா... அறக்கட்டளை கூறுவது என்ன?

2 months ago 13

அயோத்தி,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். புது ஆடைகளை வாங்குவது, பலகாரங்களை தயாரிப்பது உள்ளிட்ட விசயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரம் இந்த ஆண்டு, பிரமாண்ட தீபத்திருவிழாவை நடத்த தயாராகி வருகிறது. கடந்த ஜனவரியில் அயோத்தி நகரில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த பின்னர் நடைபெறும் முதல் தீபத்திருவிழாவாக இது இருக்கும்.

இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் தீபங்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டு அலங்கரிக்க முடிவாகி உள்ளது. இதில், சீன தயாரிப்பு பொருட்களை உபயோகிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி வெளியான ஊடக தகவலில், தீபாவளி பண்டிகையின்போது, சீன அலங்கார பொருட்களை பயன்படுத்த ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை தடை விதித்து உள்ளது. உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பது மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது மற்றும் சுயசார்பு திட்டத்தின்படி (ஆத்ம நிர்பார் பாரத்) செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உள்ளூர் கைவினை கலைஞர்கள் மற்றும் உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இருக்கிறோம். அதனால், சீன பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என அயோத்தி நகர ஆணையாளர் கவுரவ் தயாள் கூறியுள்ளார்.

ஆனால் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பற்றி குறிப்பிடும்போது, மக்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. அது அவரவர்களின் முடிவு என்று கூறியுள்ளார். அயோத்தியில் தீபாவளிக்கு முன்தினம் 28 லட்சம் அளவில் தீபங்களை ஏற்றி இந்த ஆண்டும் கின்னஸ் உலக சாதனை படைக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

Read Entire Article