தீபாவளிக்கு 3 நாட்களில் 10,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னையில் இருந்து 5.76 லட்சம் பேர் பயணம்: சென்னைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

2 weeks ago 4

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 3 நாட்களில் இயக்கப்பட்ட 10,784 சிறப்பு பேருந்துகளில் 5.76 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக தமிழக அரசு சார்பில் கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தவகையில், 3 நாட்களில் 10,784 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதில் 5,76,358 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,092 அரசு பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று 600 பேருந்துகளும் நாளை 1,735 பேருந்துகளும், நாளை மறுநாள் 830 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, பிற முக்கிய நகரங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 3,405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் நவ.4ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி விடுமுறை முடிந்து, வரும் திங்கட்கிழமை பலர் பணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை அதிகப்படியானோர் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தீபாவளிக்கு 3 நாட்களில் 10,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னையில் இருந்து 5.76 லட்சம் பேர் பயணம்: சென்னைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article