சென்னை: “தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே. இதுபோன்ற பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசே ஈடுபடக்கூடாது. மாறாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தீபாவளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீக்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான முயற்சி. தனியார் மயத்துக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.