சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்பியதால் புறநகர் பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31-ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர் செல்ல வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. சிறப்புப் பேருந்துகளில் மட்டும் சுமார் 6 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் மாலை முதல் பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். இவர்களில், ஏராளமானோர் நேற்று ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பினர். இதனால் பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.