தீபாவளி முடிந்து ஊர் திரும்ப ரயிலில் கடும் போட்டி முக்கிய நகரங்களுக்கு தட்கல் புக்கிங் 2 நிமிடத்தில் முடிந்தது: பயணிகள் ஏமாற்றம், கூடுதல் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

2 weeks ago 3

சேலம்: தீபாவளி முடிந்து முக்கிய நகரங்களுக்கு திரும்ப, இன்றைய ரயில் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் புக்கிங், 2 நிமிடத்தில் முடிந்தது. பெரும்பாலான பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. நாட்டின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில் போக்குவரத்தை, அதிகப்படியான மக்கள் விரும்புகின்றனர். அதிலும் பண்டிகை காலங்களில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிக்க மக்கள் மத்தியில் கடும் போட்டியிருக்கிறது. இதற்காக 2 மாதங்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்கின்றனர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் பயண திட்டத்தை வகுத்து செல்லும் மக்களுக்காக ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறை அமலில் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 100 முதல் 200 இருக்கைகள் வரை தட்கல் புக்கிங்கிற்காக ரயில்வே நிர்வாகம் வைத்துள்ளது.  ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன் (ஒரு நாள்) இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி, தீபாவளி பண்டிகை முடிந்து, வரும் திங்கட்கிழமையன்று பணிக்கு திரும்ப வசதியாக இன்றைய தினம் (ஞாயிறு) ரயில் பயணம் மேற்கொள்ள பலரும் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், நேற்று காலை நடந்த தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கு பயணிகளிடையே கடும் போட்டி நிலவியது. நேற்று (2ம் தேதி) காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான தட்கல் புக்கிங்கும், காலை 11 மணிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கான தட்கல் டிக்கெட் புக்கிங்கும் நடந்தது. இதனை ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் மேற்கொண்டனர். ஐஆர்சிடிசி செயலி மற்றும் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையங்களில் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கும், 11 மணிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கும் தட்கல் டிக்கெட் புக்கிங்கை மக்கள் செய்துகொண்டனர்.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்களில் தட்கல் புக்கிங், தொடங்கிய 2 நிமிடத்திற்குள் முடிந்துவிட்டது. பெரும்பாலான பயணிகள், ஆன்லைன் மூலம் இந்த தட்கல் டிக்கெட் புக்கிங்கை மேற்கொண்டனர். அதனால், அடுத்தடுத்த சில நொடிகளில் டிக்கெட் இல்லாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக இன்று சென்னைக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், சேரன், நீலகிரி, ஏற்காடு, மங்களூரு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்திலும் தட்கல் இருக்கைகள் நிரம்பி, இடமில்லை என்ற நிலை வந்தது. இதேபோல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களிலும் தட்கல் டிக்கெட் இல்லை. அனைத்தும் 2 நிமிடத்திற்குள் விற்று தீர்ந்தது.

அதேபோல், கோவை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் ரயில்களிலும் தட்கல் புக்கிங் 5 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. இதனால், பெரும்பாலான பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்காரணமாக இன்றும், நாளையும் சென்னைக்கு செல்லும் வகையில் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தீபாவளி முடிந்து ஊர் திரும்ப ரயிலில் கடும் போட்டி முக்கிய நகரங்களுக்கு தட்கல் புக்கிங் 2 நிமிடத்தில் முடிந்தது: பயணிகள் ஏமாற்றம், கூடுதல் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article