திருமயம்: தீபாவளி போனஸ் கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் கட்டணமின்றி செல்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருச்சி-காரைக்குடி பைபாஸ் சாலையில் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. சுங்க சாவடியை ஜெய் காம்த்நாத் கம்பெனி காண்ட்ராக்ட் மூலம் பராமரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் தீபாவளி போனசாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் ஊழியர்கள் தீபாவளி போனஸ் கேட்டனர். ஆனால் முறையான பதில் இல்லை.
அதேசமயம் அடுத்தடுத்த சுங்கச்சாவடிகளில் போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் மட்டும் போனஸ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஊழியர்கள் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் தீபாவளி போனஸ் குறித்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் நிர்வாகத்தினர் போனஸ் குறித்து கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் நேற்றிரவு 7 மணியில் இருந்து சுங்கச்சாவடி அருகே உள்ள அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்துள்ளது. இதனால் நேற்றிரவு முதல் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகின்றன.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், லெம்பலக்குடி டோல்கேட்டில் தினமும் சுமார் ரூ.3.5 லட்சத்துக்கு மேல் வாகனங்களிடமிருந்து சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நிர்வாகத்தினரிடம் ஊழியர்கள் தீபாவளி போனஸ் கேட்டபோது நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் போனஸ் தர முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இதனால் அங்கு பணிபுரியும் 34 ஊழியர்களும் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிர்வாகத்தினர் பேசி சுமூக முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக இன்று நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் ஊழியர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
The post தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள் appeared first on Dinakaran.