நெல்லை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற கால்நடை சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. தீபாவளி தினத்தன்று வீடுகளில் இனிப்பு பலகாரங்களுடன் வித விதமான அசைவ உணவுகளையும் சமைப்பதுண்டு. நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை களைகட்டியது. குறிப்பாக நெல்லை மேலப்பாளையம் சந்தையில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர். விவசாயிகள் கொண்டுவந்த வெள்ளாடு, செம்மறி ஆடு, மயிலம்பாடியின் ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டுகொண்டு வாங்கி சென்றனர். கிடாக்கள் எடைக்கேற்ப ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலப்பாளையம் சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஆட்டுச்சந்தையில் கட்டுக்கட்டாக பணத்துடன் வியாபாரிகள் குவிந்தனர். விலையை பொருட்படுத்தாமல் ஆடுகள் மட்டுமின்றி சண்டை சேவல், வான்கோழிகளை வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். இதே போல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வார சந்தையில் வெள்ளாடு மற்றும் ஆந்திர வகை ஆடுகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கி 9 மணி வரை 5 மணி நேரத்தில் வாடிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
The post தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டிய ஆட்டுச்சந்தை: மேலப்பாளையத்தில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.