தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குற்றங்களை தடுக்க 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: 24 மணிநேரமும் புகார் அளிக்க சிறப்பு எண்கள்; ஆலோசனைக்குப்பின் கமிஷனர் அருண் நடவடிக்கை

4 weeks ago 2

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் சிறப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடும்பத்தினருக்கு புத்தாடைகள், பட்டாசுகள், பொருட்கள் வாங்க கடந்த 2 நாட்களாக தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். எனவே, கூட்டத்தில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கவும், வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் வகையிலும் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் மற்றும் இணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகமாக கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்ற செயல்களை நடப்பதை தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து தரும் வகையில், சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 7358543058, 843866922 என்ற எண்களும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 7824867234 மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 8122360906 ஆகிய எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்த விவரம் வருமாறு:
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் என 3 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
* சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்டை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உள்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* குற்றங்களை தடுக்க தி.நகர் பகுதியில் 7 கண்காணிப்பு கோபுரங்கள், வண்ணாரப்பேட்டையில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், கீழ்ப்பாக்கத்தில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், பூக்கடை பகுதியில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் என மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாக 21 பைனாகுலர் மூலமும் குற்ற செயல்கள் நடக்காமல் கண்காணிக்கப்படுகிறது.
* தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்களை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன் மூலம் நடப்பு நிகழ்வுகளை கண்காணித்து, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் அகன்ற எல்இடி திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
* அதேபோல் 4 இடங்களிலும் காவலர்கள் 19 ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் அறிவித்து கொண்டும் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
* 17 இடங்களில் ஸ்பீக்கர்கள் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
* தி.நகர் மற்றும் பூக்கடை பகுதியில் தலா 2 என 4 டிரோன் மேகராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.
* பழைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக எப்ஆர்எஸ் என்ற செல்போன் செயலி மூலம் காவலர்கள் சுழற்சி முறையில் தனித்தனி குழுக்காக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ் அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கப்பட்டு வருகிறது.
* சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், போலீசார் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
* பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க, கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு, பெண்களுக்கு துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
* பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.
* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குற்றங்களை தடுக்க 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: 24 மணிநேரமும் புகார் அளிக்க சிறப்பு எண்கள்; ஆலோசனைக்குப்பின் கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article