தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, பட்டாசு, இனிப்பு விற்பனை களைகட்டியது

3 weeks ago 6

* சொந்த ஊர் செல்ல பஸ், ரயில் நிலையங்களில் குவிந்தனர்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு (அக். 31) இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்தன. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், ரயில்களில், விமானங்களில் செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர். இதேபோல பலகாரக் கடை, பட்டாசு கடைகளிலும் விற்பனையும் களைகட்டியது.

தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலைமுதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை நேற்று களைகட்டின. சென்னையை பொறுத்தவரை கடை வீதிகளில் கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையின் முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக சென்னை மட்டுமல்லாமல், புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், பக்கத்து மாவட்டமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பக்கத்து மாநிலமான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்த காட்சியை காண முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர். அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், சாலையோரக் கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக தலைதீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. மாலை நேரத்தில் இந்த கூட்டம் பல மடங்கு உயர்ந்தது. இதனால், திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. மக்கள் வெள்ளத்தில் மூழ்கி தீபாவளி பொருட்களை மக்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது. சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

ஒவ்வொரு ரயில்களிலும் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகை விடுமுறை. மறுநாள் தமிழக அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

இதனால், தீபாவளியை உற்சாமாக கொண்டாடும் வகையில் நாளை மறுநாள் முதல் மக்கள் சென்னையில் இருந்து புறப்படுவார்கள் என்று தெரிகிறது. இதனால், அன்றைய தினம் முதல் பஸ், ரயில்கள் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை ரயில், பஸ்களில் செல்வோர் எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்துறை சார்பில் இன்று முதல் 30ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் பிற ஊர்களிலிருந்து இந்த 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு வசதியாக வருகிற 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12,606 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதேபோல சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வாங்கவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுவீட் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.

* சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

* மேலும் சுவீட் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இனிப்புகளை வாங்கி சென்றனர்.

* தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு வசதியாக வருகிற 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மொத்தம் 9,441 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, பட்டாசு, இனிப்பு விற்பனை களைகட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article