*வாகன நெரிசலால் திணறியது
திருவண்ணாமலை : தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்ல திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை அமைந்தது. அதோடு, தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு கூடுதலாக அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதனால், குடும்பத்துடன் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவோருக்கு வசதியாக அமைந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் திரும்பும் பயணிகளால், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. நேற்று காலையில் தொடங்கி இரவு வரை பஸ் நிலையத்தில், மக்கள் கூட்டம் அலைமோதியது.குறிப்பாக, சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டபோதும், அனைத்து பஸ்களிலும் நின்றபடி பயணிக்கும் நிலைமை காணப்பட்டது. பெங்களூரு வழிதடத்தில் பஸ்சுக்காக மக்கள் தவிக்கும் நிலை இருந்தது. தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு பிறகு அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
மேலும், திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நகருக்குள் கனரக வாகனங்கள், சுற்றுலா வேன் போன்றவை அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் நேற்று இரவு வரை குறையவில்லை. திருவண்ணாமலை நகருக்குள் வாகன நெரிசல் ஏற்பட்டதால் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே பார்க்கிங் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
The post தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் பயணம் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.