சென்னை,
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர். இதனால், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, வழக்கமான பரபரப்பு இன்றி காணப்படுகிறது. இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 2-ந்தேதி (இன்று) முதல் 4-ந்தேதி வரையில் தினந்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பஸ்களும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3 ஆயிரத்து 405 பஸ்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 846 பஸ்கள் இயக்கப்படும். எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.