தீபாவளி பட்டாசு வெடித்தது எதிரொலி: சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு

2 weeks ago 4

* கடந்தாண்டை விட குறைந்தது, மாசுகட்டுப்பாடு வாரியம் தகவல்

சென்னை: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததால் சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாசு குறைந்துள்ளதாகவும் மாசுகட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. ‘‘மோசமானது” என்றால் AQI 201-300, ‘‘மிகவும் மோசமானது” என்றால் AQI 301-400, ‘‘கடுமையானது” என்றால் AQI 401-450, ‘‘கடுமையாக தீவிரமானது” என்றால் AQI 450க்கு மேல் என்பது காற்றின் தரத்தின் அளவுகோலாகும்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி, அருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டியுள்ளது. இதில் பெருங்குடியில் காற்றின் தரம் 262 ஆகவும், ஆலந்தூர் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்று காற்றின் தரக்குறியீடு மோசன நிலையில் உள்ளது. அதேபோல் சென்னையின் எந்த பகுதியிலும் காற்றின் தரம் சிறப்பானதாக இல்லை என்று மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், பலர் விதிகளை மீறி பட்டாசுகளை கொளுத்தி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழக அரசு மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரங்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது காற்றின் தரக்குறியீடு குறித்து பரிசோதித்து பார்க்கப்படும்.

அந்த வகையில் சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் வெடித்த பட்டாசுகளால் ஏற்படும் காற்றின் மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்படும் காற்றின் தரக்குறியீடு வைத்து பார்க்கும்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்துள்ளது. ஆனாலும், காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

* தீபாவளி நாளான்று இரவு 10 மணி நிலவரப்படி ஆலந்தூர் பேருந்து நிலையத்தில் 259 ஆக இருந்த காற்றின் தர குறியீடு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 222 ஆக குறைந்துள்ளது.

* அரும்பாக்கத்தில் 231 ஆக இருந்த தர குறியீடு 168 ஆக குறைந்தது

* கொடுங்கையூரில் 147 தர குறியீடு நேற்று காலை 106 ஆக குறைந்தது

* மணலியில் தரக் குறியீடு 176 நேற்று காலை 113 ஆக குறைந்தது

* பெருங்குடியில் 277 ஆக இருந்த தர குறியீடு 234 ஆக குறைந்தது

* ராயபுரத்தில் 154 ஆக இருந்த தர குறியீடு 87 ஆக குறைந்தது

* வேளச்சேரியில் 250 காற்றின் தர குறியீடு 222 ஆக குறைந்தது.

குறிப்பாக சென்னையில்,
* ஆலந்தூர் கடந்த ஆண்டு 230, இந்த ஆண்டு 222

* அரும்பாக்கம் கடந்த ஆண்டு 251, இந்த ஆண்டு 168

* கொடுங்கையூர் கடந்த ஆண்டு 124, இந்த ஆண்டு 106

* மணலி கடந்த ஆண்டு 313, இந்த ஆண்டு 113

* ராயபுரம் கடந்த ஆண்டு 242, இந்த ஆண்டு 87

The post தீபாவளி பட்டாசு வெடித்தது எதிரொலி: சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article