தீபாவளி சிறப்பு ரயிலில் ஏற முண்டியடித்த பயணிகள் மும்பை ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயம்

3 weeks ago 4

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தீபாவளி சிறப்பு சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பண்டிகைக்காக மும்பை பாந்திரா ரயில் முனையத்தில் இருந்து உபி மாநிலம் கோரக்பூருக்கு நேற்று அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேற்று இயக்கப்பட்டது. தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பலர் நேற்று முன்தினம் இரவு முதலே பாந்திரா ரயில் நிலையத்துக்கு வர தொடங்கினர்.

இந்த நிலையில் அதிகாலை 2.45 மணிக்கு பாந்திரா ரயில் நிலையத்தின் 1வது பிளாட்பாரத்துக்கு ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது ஏராளமான பயணிகள் முண்டியடித்து ரயிலில் ஏற தொடங்கினர். இதில்,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.  இது குறித்து மும்பை பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் இருவரும் பாபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூட்ட நெரிசலில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் இருவரின் நிலைமை தற்போது நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளது. பாந்திரா நெரிசல் சம்பவம் பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிடுகையில்,பாந்திரா சம்பவம் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிதைந்து வருவதை காட்டுகிறது.

ஒடிசா பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 300 பேர் பலியாகினர்.இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுடன் சட்ட போராட்டத்தில் பாஜ அரசு ஈடுபட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்ட 9 மாதங்களில் இடிந்து விழுந்தது. பாஜ அரசின் ஒரே நோக்கம் தங்களை விளம்பர படுத்தி கொள்வதிலேயே இருக்கிறது. சத்ரபதி சிவாஜி மீது மரியாதையோ அல்லது பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலோ அரசுக்கு அக்கறை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

The post தீபாவளி சிறப்பு ரயிலில் ஏற முண்டியடித்த பயணிகள் மும்பை ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article