லண்டன்,
உலகம் முழுவதும் இந்து மதப்பண்டிகையான தீபாவளி கடந்த மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனிடையே, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளி நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிபர் பைடன் தலைமையில் தீபாவளி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி அக்டோபர் 29ம் தேதி நடைபெற்றது. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் இந்துக்கள் பலர் பங்கேற்றினர். இந்த நிகழ்ச்சியில் மதுபானம், இறைச்சி உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது.
தீபாவளி தொடர்பான நிகழ்ச்சியில் இறைச்சி உணவு, மதுபானம் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நிகழ்ச்சியில் இறைச்சி உணவு, மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக்கேட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தவறு இனிவரும் காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.