திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலை, மண்ணரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). கருமாரம்பாளையம் பாஜ கிளை அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த பொதுமக்களிடம் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரூ.3 கோடிக்கும் மேல் சீட்டு நடத்தி வசூல் செய்துள்ளார். தீபாவளி சீட்டு முதிர்வடைந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டிய நிலையில் பாஜ அலுவலகத்தில் இருந்த கட்சிக்கொடி மற்றும் தலைவர்கள் புகைப்படங்களை கிழித்து அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் கருமாரம்பாளையம் பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செந்தில் குமார் பாஜவில் இல்லை என்று திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செந்தில்வேல் தொிவித்துள்ளார்.
The post தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாஜ பிரமுகர் ரூ.3 கோடி பணத்துடன் தலைமறைவு: மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.