சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நடப்பாண்டும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 31ம்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பட்டாசுகள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க இன்று காலை முதல் பஜார் வீதிகளில் திரள தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நடப்பாண்டும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.