
சென்னை,
பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் வளர்ச்சிக்காகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அறிவிப்பதாகவும், மாற்றத்துற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது, சிறுக சிறுக தெரிவிப்பேன் எனக் கூறினார்.
பா.ம.க.வை பொறுத்தவரையில் புதிய நிர்வாகிகள், அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டிதான் நியமிக்கப்படுவார்கள். அதேபோன்று, அந்த கட்சி சட்டத்திட்டத்தின்படி, தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவெடுப்பதற்கும், இந்த சிறப்பு பொதுக்குழுவுக்கே அதிகாரம் உண்டு என பா.ம.க. வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
அந்த வகையில், அன்புமணி ராமதாசை, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கியது செல்லாது என்றும், தேர்தல் கமிஷனில் அன்புமணி ராமதாசின் பெயர் இடம் பெற்றிருப்பதால், கட்சியில் அவருக்கே அதிகாரம் என்றும் பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில், இந்நிலையில் பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பொருளாளர் திலகபாமா, "பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. ராமதாஸ் அய்யா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்... அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன் தனிநபர்களைவிட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தைவிட சமூகம் பெரியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள்.இந்தநிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சமாதானம் செய்யச் சென்ற பாமக பொருளாளர் திலகபாமாவை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணி ராமதாசை கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது தவறு என முன்னதாக திலகபாமா சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.