டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

1 day ago 1

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் ஜங்புரா மதராஸி கேம்பில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றி, அவர்களின் வீடுகளை இடிக்க பாஜக தலைமையிலான டெல்லி மாநில அரசு முயற்சிப்பதாகவும், இதற்கு எதிராக அம்மக்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், 50 முதல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் குடும்பங்களுடன் வசிக்கும் குடியிருப்புப் பகுதியாகும். இவர்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள், வீட்டு வேலை, தெருவோர வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குடியிருப்பு பகுதியை காலி செய்ய டெல்லி நகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டிருந்த நிலையில், "ஜஹான் ஜுங்கி வஹான் மகான்" (எங்கு குடிசை உள்ளதோ அங்கேயே வீடு) என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் இப்பகுதி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் இப்பகுதியில் பிரச்சாரம் செய்ததாகவும் தெரிகிறது.

எனினும், பாஜகவின் வாக்குறுதிக்கு மாறாக, 50 கி.மீ. தொலைவில் உள்ள நரேலாவில் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வெறும் 189 பேருக்கு மட்டுமே அந்த வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

50 கி.மீ. தொலைவில் குடியிருப்புகளை மாற்றுவது, ஜங்புராவில் உள்ள மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் என்பதால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியின்படி, அப்பகுதியிலேயே மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, பாஜக அரசின் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

மதராஸி கேம்ப் ஒரு அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாகும். எனவே, இடிப்புக்கு முன் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில், தமிழர்களின் கோரிக்கை நியாயமானது.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, புலம்பெயர் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. மேலும், இவ்விவகாரத்தில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து எஸ்டிபிஐ கட்சி போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article