
கோவை,
கோவை அன்னூர் நிகழ்ச்சியில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக நடந்த பாராட்டு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்துவிட்டன. என்னால் இயன்றதை செய்து அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 4 ஆண்டு காலம் திட்டத்தை கிடப்பில் போட்டனர். மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
திட்டத்தை கொண்டுவர எந்த முயற்சியும் செய்யாமல் திறந்து மட்டும் வைத்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மக்கள் நலனை பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை. தற்போது திறமையற்ற அரசாங்கம்தான் ஆட்சியில் உள்ளது. பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன் என்றார்.