இத்தாலியில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம் - பீதியில் உறைந்த மக்கள்

9 hours ago 1

நேப்பிள்ஸ்,

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் நேற்று அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் அந்நகரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் கூறுகையில், "நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான ப்ளெக்ரேயன் வயல்களின் பொஸ்ஸோலி பகுதியில் 3 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது பதிவு செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது அம்மாகாணம் முழுவதும் பயங்கர சத்தத்துடன் அபாய ஒலிகள் தொடர்ந்து ஒலித்ததாகவும், சில இடங்களில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அப்பகுதியிலுள்ள சில கட்டிடங்கள் இடிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்து சிதைந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பக்னோலி மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொஸ்ஸோலி, பாக்னோலி மற்றும் பக்கோலி மாவட்ட நிர்வாகத்தினர் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர். தற்போது நிலநடுக்கத்தைச் சந்தித்துள்ள நேப்பிள்ஸ் நகரமானது நில அதிர்வு அபாயமுள்ள ப்ளெக்ரேயன் வயல்கள் எனும் மிகப் பெரிய அளவிலான எரிமலையின் பெருவாயின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article