
பெங்களூரு,
இயக்குனர் ஸ்மரன் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் ரெட்டி'. அன்ஜன் ராமசந்திரா, ஸ்ரவாணி கிருஷ்ணவேணி, என்.டி.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த 18-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றுவரும்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்ற படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினர்.
அப்போது இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த என்.டி.ராமசாமியை கண்டதும் பெண் ஒருவர் காதல் ஜோடியை ஏன் பிரித்தாய்? என ஆவேசமடைந்து அவரை அறைந்தார். பல முறை தடுத்தும் கேட்காமல் அவரை தொடர்ந்து அடிக்க பாய்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, அந்த பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த என்.டி ராமசாமி, காதல் ஜோடியை கதைப்படி பிரித்ததாக தெரிகிறது. இந்த கதை அந்த பெண்ணின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.