
இந்தி திரையுலகில் 1990-களில் புகழ் பெற்ற முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித். நடனத்திலும் திறமை காட்டினார். தேஜாப், கல்நாயக், சாஜன், பேட்டா, ஹம் ஆப்கே ஹைன் கவுன், தேவதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியாவின் பிரபல ஓவியரான எம்.எல்.ஹுசேன் மாதுரி தீட்சித்தின் நடிப்பை பாராட்டி ஓவியங்கள் வரைந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய மாதுரி தீட்சித்துக்கு மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடந்து பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் "பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் எனவும் பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஓவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது.உண்மையில் சினிமா துறையில் பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.பாகுபாடு நடைபெறவில்லையென்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம். சம்பளத்திலேயே ஆண், பெண் பாகுபாடு உள்ளது. ஆண்கள் ஒருமுறை செய்வதை நாங்கள் 10 முறை அதிகாமாக செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கடினம். இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன்.வசூலில் அசத்திய பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்ட்ரீ 2 போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும். இதற்கு குறுக்கு வழிகள் என எதுவும் இல்லை" என்றார்.
கடைசியாக 'பூல் புலையா 3' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இணையத்தொடரிலும் நடித்து வருகிறார்.