திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டுக்கு உட்பட்ட மாணிக்கம் நகரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்களும் பொதுமக்களும் சென்றுவருகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த ரயில்வே சுரங்கப்பாதையின் கீழே அடிக்கடி நீர் ஊற்று உருவாகி தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ‘’மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்க பாதையை சீரமைத்து தரவேண்டும்’’ என்று வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் ஊற்றுநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த ராட்சத நீர் உறிஞ்சும் மோட்டார் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டாரவி தேஜா, மண்டல உதவி ஆணையர் விஜயபாபு, செயற்பொறியாளர்கள் பாண்டியன், பாபு, கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆகியோர் ரயில்வே சுரங்க பாதையை பார்வையிட்டனர். இதன்பின்னர் ராட்சத நீர் உறிஞ்சும் மோட்டார் மையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ‘’பராமரிப்பு பணிக்காக சுரங்கப்பாதை போக்குவரத்தை நிறுத்தவேண்டும். தற்போது 10, 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றுகொண்டிருப்பதால் மாணவ, மாணவிகள் சுரங்கப்பாதை பயன்பாடு தடைப்படாமல் இருக்க தேர்வு முடிந்ததும் சுரங்கப்பாதை பணி துவங்கும்’’ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருவொற்றியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் ஊற்றுநீர் தேங்குவதால் அவதி appeared first on Dinakaran.