சென்னை,
சென்னை திருவேற்காட்டில் உள்ள பிரசித்திபெற்ற தேவி கருமாரியம்மன் கோவிலில், அறங்காவலர் வளர்மதி மற்றும் சில பெண்கள் இணைந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் அறங்காவலர் வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், "திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அறங்காவலர் வளர்மதி என்பவர் 12 பெண்களுடன் சேர்ந்து சாமி சிலை முன்பு நடனமாடி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உடை அணிந்து, திட்டமிட்டு வீடியோ எடுத்துள்ளனர். இது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு 2 முறை புகார் மனு அனுப்பியுள்ளேன். என் புகார் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை இருக்கும்? எல்லோரும் வேப்பிலை கட்டி வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் நிலையில், சாமி மீது பயம் வேண்டாமா? இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று காட்டமாக கூறினார்.
பின்னர், "இந்த பிரச்சினையை தீவிரமாக பார்க்கிறேன். அதனால், ரீல்ஸ் எடுத்த அறங்காவலர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை வருகிற 29-ந்தேதிக்குள் அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.