சென்னை: திருவேற்காடு கோலடி ஏரியில் 2வது நாளாக 26 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் மற்றும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரி, 169 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால், தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கர் அளவுக்கு ஏரியின் பரப்பளவு குறைந்து விட்டது. மேலும், இந்த ஏரியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்ததில், ஏரியை ஆக்கிரமித்து மேலும் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள 7 கட்டிடங்கள் மற்றும் கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடங்களை நேற்று முன்தினம் மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் இடித்து அகற்றினர்.
இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக வருவாய்த்துறையினர் வந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 300க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களை இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால், அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து கட்டிடங்களை இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டனர்.
20 வீடுகள் அகற்றுவதாக கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வீடுகளை அகற்றியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருவேற்காடு கோலடி பிரதான சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் அம்பத்தூர் – திருவேற்காடு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் வருவாய்த் துறையினரும், போலீசாரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த பொக்லைன் இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கோலடி ஏரியில் முதல் கட்டமாக 26 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
The post திருவேற்காடு கோலடி ஏரியில் கட்டப்பட்ட 26 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.