திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு: வைக்கோல் ஏற்ற சென்ற டிராக்டர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து

2 hours ago 1

 

திருவெண்ணெய்நல்லூர், பிப். 24: வைக்கோல் ஏற்ற சென்ற டிராக்டர் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் நடக்கவிருந்த கோர விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில்கள் தாமதமாக சென்றன. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆணைவாரி-ஆத்திப்பட்டு ரயில்வே கேட், கடலூர்- சித்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டதால் நிரந்தரமாக மூடப்பட்டது.

தடை செய்யப்பட்ட இந்த ரயில்வே கேட்டின் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் சக்தி (35) என்பவர் வைக்கோல் ஏற்றுவதற்காக நேற்று டிராக்டரில் டிரெய்லருடன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, தண்டவாளத்தில் டிரெய்லர் சிக்கிக்கொண்டது. அப்போது நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், டிராக்டர் டிரெய்லர் மீது மோதியதில், டிரெய்லர் தூக்கி வீசப்பட்டது. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர், சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் வருவதை பார்த்து டிராக்டர் டிரைவர் இறங்கி ஓடி தப்பித்தார். தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் வந்து ரயிலை பரிசோதித்த பிறகு, ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் 1.15 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.

இந்த விபத்து காரணமாக சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களும், திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின்னர் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டிராக்டரை ஓட்டி வந்த சக்தியை விருத்தாசலம் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். டிராக்டர் மீது ரயில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு: வைக்கோல் ஏற்ற சென்ற டிராக்டர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article