திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி? சிசிடிவி கேமரா பதிவின்படி 100 பேரிடம் விசாரணை: ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

8 hours ago 2

திருத்தணி, ஏப்.27: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவாலங்காடு, அரக்கோணம் வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மற்றும் திருத்தணி வரை மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 1.15 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே வந்தபோது, திடீரென சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று அந்த வழித்தடத்தில் வந்த சதாப்தி, திருவனந்தபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனையடுத்து, தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் லைன்மேன் சோதனை மேற்கொண்டார்.

அப்போது, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு-ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ேமாசூர் ரயில் நிலையங்கள் இடையே அரிச்சந்திராபுரம் பகுதியில் உள்ள தண்டவாள இணைப்பு மாற்றும் பாயிண்ட் பகுதியில் போல்ட், நட்டுகள் கழன்று இருப்பதை அவர் கண்டுபிடித்தார். சிறிது தூரத்திலும் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த லைன்மேன், உடனடியாக அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, 2 இடங்களிலும் போல்ட், நட்டுகள் கழன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் அரக்கோணம், திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களும் வந்தனர். அவர்கள், போல்ட், நட்டுகள் எப்படி கழன்றது என ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் ஐ.ஜி.ஈஸ்வர ராவ் தலைமையில், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் இறையன்பு, சென்னை கோட்ட ரயில்வே ஐஜி ஏ.ஜி.பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாள பாயிண்ட் பகுதியில் இருந்து போல்டு நட்டுகள் அகற்றியது எப்படி?, இதில் சதி வேலை இருக்குமோ? என சந்தேகித்தனர்.

தொடர்ந்து மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ேபால்டு நட்டுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணிநேரத்திற்கு பிறகு வழக்கம்போல் ரயில் சேவை ெதாடங்கியது. இது தொடர்பாக, தீங்கு இழைக்கும் நோக்கத்துடன் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, 3 தனிப்படை அமைத்து, நாசவேலையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் திருவாலாங்காடு, அரிச்சந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டை, மருதவள்ளிபுரம், மோசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளையும் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஆய்வு செய்து இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை இதுபோன்ற சம்பவத்தால் ரயில் விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சென்னை, அரக்கோணம், திருத்தணி, ஆந்திரா, திருப்பதி ரயில் மார்க்கத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தண்டவாளங்களிலும் இரவு, பகலாக போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி? சிசிடிவி கேமரா பதிவின்படி 100 பேரிடம் விசாரணை: ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article