திருவாரூர், பிப்.10: திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 639 பேர்களுக்கு ரூ 12 கோடியே 13 லட்சம் மதிப்பிட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டமானது முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரால் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வரையில் 2 லட்சத்து 88 ஆயிரம் குடும்பங்கள் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டமானது பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து 23.09.2018 முதல் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதன் மூலம் திட்டப்பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதமமந்திரிமக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மன்னார்குடியில் இயங்கி வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் 7 தாலுக்கா அரசு மருத்துவமனைகள் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 14 மருத்துவமனைகள் அங்கரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவசேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கடந்தாண்டில் ஜனவரி முதல் டிசம்பர் 31ந் தேதி வரையில் மொத்தம் 12 ஆயிரத்து 639 நபர்களுக்கு ரூ 12 கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 213 மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீடு அட்டைகள் மூலம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் சிகிச்சை பெற்றுகொள்ளலாம். மேலும் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனவே மருத்துவக் காப்பீட்டுஅட்டை தேவைப்படுவோர் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற ஆண்டு வருமான சான்று ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மையத்தை அணுகி பதிவுசெய்து புதிய காப்பீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12,639 நபர்களுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.