திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ரெயில்வே மேம்பாலம் அருகில் நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், இரவு சன்னதி தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயத்தமானார். அப்போது திடீரென சன்னதி தெருவில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் திமுக அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்தத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்..! appeared first on Dinakaran.