கடும் மழை, வெயில் இல்லாத சூழல்; தமிழகத்தில் வேகமெடுக்கும் கட்டுமான பணிகள்: தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு

9 hours ago 4

சேலம்: தமிழகத்தில் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் கட்டுமான பணிகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்து வருவதாகவும் இன்ஜினியர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழகத்தில் உள்ள 90 சதவீத குவாரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 75 சதவீத கட்டுமான பணிகள் நின்றது. ஆற்று மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் வந்தது. கடந்த ஏழு ஆண்டாக 95 சதவீத கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. கடந்த மே மாதத்தில் எம்சாண்ட், பி சாண்ட் விலை உயர்வு மற்றும் குவாரிகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அப்போது கட்டுமான பணிகள் குறைந்தது. ஜூன் மாதத்தில் பெரும்பாலான நாட்களில் மழை பெய்தது.

இதனால் கட்டுமான பணிகள் குறைந்தது. தற்போது தமிழகம் முழுவதும் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் கட்டுமான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்து வருவதாகவும், அதேவேளையில் கட்டுமான பணிக்கான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இன்ஜினியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த இன்ஜினியர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கட்டுமான தொழிலை நம்பி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள், மேஸ்திரிகள், தொழிலாளர்கள் இருக்கின்றனர். கட்டுமான தொழிலை சார்ந்து மரம், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட், எலக்ட்ரிக் சாமான்கள், பிவிசி பைப்புகள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனையில் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

எம்.சாண்ட் விலை உயர்வு, குவாரிகள் வேலை நிறுத்தம், மழை காரணமாக கடந்த இரு மாதமாக கட்டுமான பணியில் சிறு தொய்வு ஏற்பட்டது. தற்போது அதிகளவில் மழை இல்லாமலும், கடும் வெயில் இல்லாமலும் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் தமிழகம் முழுவதும் 40 சதவீதம் கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளன. கட்டுமானத்தை சார்ந்துள்ள உப தொழில்களிலும் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் கூடியுள்ளது. இத்தொழிலை சார்ந்துள்ள ெதாழிலாளர்களுக்கு வாரத்தில் அனைத்து வேலை நாட்களும் பணி கிடைத்து வருகிறது. குறிப்பாக பிளம்பிங், எலக்ட்ரிக்கல், டைல்ஸ் ஒட்டுவது, சீலிங் அலங்கரிப்பது, மண் அள்ளுவதற்கு கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுவதால் வட மாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் வந்துள்ளனர்.

இதனால் எவ்வித தொய்வு இல்லாமல் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை முடித்து வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகிறோம். அதனால் வீட்டின் உரிமையாளர்கள் சந்தோஷமாக உள்ளனர். இவ்வாறு இன்ஜினியர்கள் கூறினர்.

சிமெண்ட், கம்பி விற்பனை அதிகரிப்பு
கட்டுமான பணிகள் அதிகரிப்பால் தளவாட பொருட்களான சிமெண்ட், இரும்புக்கம்பி, கருங்கல்ஜல்லி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், பெயிண்ட், மரச்சாமான்கள், சின்டெக்ஸ் டேங்க், பிவிசி, மின் ஒயர்களின் விற்பனை கூடியுள்ளது. கடந்த இரு மாதத்திற்கு முன்பு நடந்த விற்பனையை காட்டிலும் இரு வாரமாக விற்பனை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில் உற்பத்தி கூடங்களில் கூடுதலாக சரக்குகள் கேட்டு இருப்பு வைத்து வருகின்றனர் என்றும் இன்ஜினியர்கள் கூறினர்.

The post கடும் மழை, வெயில் இல்லாத சூழல்; தமிழகத்தில் வேகமெடுக்கும் கட்டுமான பணிகள்: தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article