திருவாரூர். நவ.14: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டு காலத்தில் ரூ 110 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் மனைகள் அறநிலைய துறையினர் மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் உயர் அலுவலர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி கோயில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவை மட்டுமின்றி ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணமும் அவ்வப்போது நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 21ந் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இதேபோன்று அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணமானது நடைபெற்றது.
இந்நிலையில் இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள், மனைகள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சர்வேயர்களை கொண்டு அறநிலைய துறையின் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் நீண்ட நாட்களாகவே அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் என இதுவரை தெரியாமலேயே இருந்து வரும் நிலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இதுவரையில் மாநிலம் முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் அறநிலைய துறையின் இணை ஆணையர் குமரேசன் உத்தரவின்பேரில் கடந்தாண்டு வரையில் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், கிருபாசமுத்திர பெருமாள் கோயில், ரேணுகா தேவி அம்மன் கோயில், பிறவிமருந்தீஸ்வரர் கோயில், கபிலேஸ்வரர் கோயில், ஐநூற்றுபிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் மனைகள் என ரூ.38 கோடி மதிப்பில் அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் திருத்துறைப்பூண்டி பவஓளஷதீஸ்வரர் கோயில், கற்பகநாதர்சுவாமி கோயில், திருவாரூர் விஜயபுரம் கபிலேஸ்வரர் கோயில், ஐநாற்றுபிள்ளையார் கோயில், மன்னார்குடி புற்றடிமாரியம்மன் கோயில் என இந்த கோயில்களுக்கு சொந்தமாக ரூ.72 கோடியே 17 லட்சம் என மொத்தம் 2 ஆண்டு காலத்தில் ரூ.110 கோடியே 17 லட்சம் மதிப்புடைய நிலங்கள் மற்றும் மனைகள் அறநிலையதுறை செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு அறநிலையதுறைக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில் திருவாரூர் விஜயபுரம் கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மட்டும் ரூ.67 கோடி மதிப்பில் ஜவுளி கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சர்வேயர்களை கொண்டு அறநிலைய துறையின் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் நீண்ட நாட்களாகவே அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் என இதுவரை தெரியாமலேயே இருந்து வரும் நிலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
The post திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் ரூ.110 கோடி நிலம், மனைகள் மீட்பு appeared first on Dinakaran.