திருவாரூர், ஜன. 21: திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பாக பெருந்தரக்குடி ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்திலும், தேவர்கண்டநல்லூர் ஊராட்சி பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். திருவாரூர் நகராட்சியுடன் தண்டலை, கீழகாவாதுகுடி, வேலங்குடி, இலவங்கார்குடி, தேவர்கண்டநல்லூர் மற்றும் காட்டூர் என 6 ஊராட்சிகள் மற்றும் அலிவலம், புலிவலம், பழவனக்குடி, அம்மையப்பன் மற்றும் பெருந்தரக்குடி ஊராட்சிகள் பகுதியாகவும் இணைப்பதற்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. நகரமயத்தினை பெரும்பாலான மக்கள் ஆதரித்தாலும், வரி விதிப்பு விகிதம் அதிகமாவது மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டம் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
அது மட்டுமின்றி குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் எனப்படும் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமும் பறிபோகும் என்பதால் இந்த நகரமயம் திட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. நகர பகுதியில் இணைக்கப்படும் ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதுடன் அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெருந்தரக்குடி ஊராட்சியின் ஒருபகுதி திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மேற்படி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேபோல் தேவர்கண்டநல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் தனிதனியாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
The post திருவாரூர் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியினை இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.