திருவாரூர், பிப். 14: கோடை வெப்பம் கருதி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக நடைபாதைகளில் தரை விரிப்புகள் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் நடைபெறும் நிலையில் இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த கோயிலுக்கு வழக்கமாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் போது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பகல் நேரங்களில் பிரகாரங்களை கடந்து செல்வதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் தரை விரிப்புகள் ஆண்டுதோறும் அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நடப்பாண்டிலும் தற்போது கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் தரை விரிப்புகளை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்தி ற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் கோடை வெப்பத்தை கருதி தரை விரிப்புகள் அமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.