திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

3 months ago 18

 

திருவாரூர், அக்.8: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 237 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாருஸ்ரீ சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். வழக்கம்போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

அதனைதொடர்ந்து, தேசிய தோட்டகலை இயக்கத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.15 ஆயிரம் வீதம் காய்கறி விற்பனை வண்டி மற்றும் சவுதி அரபியா நாட்டில் விபத்தில் இறந்த மன்னார்குடியை சேர்ந்த லெட்சுமிநாராயணன் குடும்பத்திற்கு ரூ.40 ஆயிரம் நிதியுதவி என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் நீதிமாணிக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article