திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கையேட்டினை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் என் கல்லூரி கனவு என்ற தலைப்பில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்விக்கு சரியான வழியை ஏற்படுத்தித்தருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் மூலம் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகிறது.
மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித்தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.
இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களும் சிறந்த வாய்ப்புகளுக்கு எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம் வருங்காலத்தை வளப்படுத்த எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம் உதவித்தொகை வாய்ப்புகள் என்ன போன்ற தகவல்களை தெரிந்து கொண்டு சரியான உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றிப்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு வழிகாட்டுதல் கையேட்டினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆர்டிஒ சௌம்யா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் அமுதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவாரூரில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடுகளை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.