திருவான்மியூர் - உத்தண்டி இடையே 4 வழி உயர்மட்ட சாலை: பட்ஜெட்டில் அறிவிப்பு

6 hours ago 1

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசியதாவது:-

நாட்டிலேயே பரவலான சாலை வசதிகளைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இவ்வகை சாலை வசதிகளை மேலும் செம்மைப்படுத்திடும் நோக்கத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 16,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2,130 கி.மீ. முக்கியச் சாலைகள் நான்குவழி மற்றும் இருவழிச் அகலப்படுத்தப்பட்டுள்ளன. 5,000 கி.மீ.க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியச் சாலைகள் பிற மாவட்ட சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் அமைக்கப்படும்.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களை உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற்பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

நகராட்சிகள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 கி.மீ. நீளம் கொண்ட கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை. மற்றும் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.4 கி.மீ நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட 14 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மொத்தம் 1,713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு தொடங்கும். மேலும், 48 கி.மீ. நீள மதுரை வெளிவட்டச் சாலை அமைத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article