திருவாடானை: திருவாடானை அருகே சாலை பணியால் சிறிய பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் உயரம் குறைந்து தரமட்டத்திற்கு தாழ்ந்துள்ளன. இதனால் விபத்துகள் தொடர்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாகனவயல் விலக்கு பகுதியில் சிறிய பாலம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. அப்போது பாலத்தின் தடுப்புச் சுவர் தரைமட்டத்தில் இருந்து சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொண்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது.
அப்போது சிறிய பாலத்தின் இருபுற தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் உயரம் குறைந்து தரமட்டத்திற்கு தாழ்ந்துள்ளன. தினசரி இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரெதிர் திசையில் வரும்போது பாலத்தை கவனிக்காமல் பக்கவாட்டில் சரிந்து விழுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது: இரவு நேரத்தில் இந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும்போது, பாலம் இருப்பது தெரியாமல் கீழே விழும் அபாயம் தொடர்கிறது. சாலையோரம் நடந்து செல்வோரும் விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் பாலத்தில் தடுப்புச்சுவர் சாலை மட்டத்தில் உள்ளதை கவனிக்காமல் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். கனரக வாகனங்கள் இந்த பகுதியில் விபத்தில் சிக்கினால் பெரியளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகளை அச்சுறுத்தும் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். சாலையோர பாலத்தின் இரு பக்கவாட்டு சுவர்களின் உயரத்தையும் அதிகரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவாடானை அருகே சாலை பணியால் மாயமான பாலத்தின் தடுப்புச்சுவர்: தொடரும் விபத்து அபாயம் appeared first on Dinakaran.