திருவள்ளூர்: ரசாயன ஆலையில் தீ விபத்து - அருகில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

4 months ago 21

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் ரசாயன ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதற்கிடையில், ரசாயன ஆலைக்கு அருகே உள்ள பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர். மேலும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதோடு அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article