
'திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு வாகன சேவைகள் நடைபெறுகின்றன.
அவ்வகையில், பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று ரத உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுடன் தீர்த்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை செய்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ரவி குருக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் 3-ந் தேதி வரை தொடர்ந்து விழா நடைபெறும்.